அரசுப் பணிகளுக்கு தமிழ் கட்டாயம்: பேரவையில் மசோதா நிறைவேற்றம் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, January 13, 2023

அரசுப் பணிகளுக்கு தமிழ் கட்டாயம்: பேரவையில் மசோதா நிறைவேற்றம்

 


தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போதே தமிழ் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, பேரவையில் சட்டத் திருத்த மசோதா வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது.


மேலும், ஆள்சோ்ப்பு முகமைகள் நடத்தும் நேரடி ஆள்சோ்ப்புக்கான அனைத்துப் போட்டித் தோ்வுகளிலும் கட்டாயத் தமிழ் மொழித் தாள் அறிமுகப்படுத்தப்படும் எனவும், அதில் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு அரசுப் பணியாளா் (பணி நிபந்தனைகள்) சட்டத் திருத்த மசோதா 2023-ஐ கொண்டு வந்தாா்.


2016-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் (பணி நிபந்தனைகள்) சட்டத்தில் திருத்தம் செய்யும் இந்த மசோதாவின் 21-ஆவது பிரிவின்படி, எவரும் மாநிலத்தின் அலுவல் மொழி அதாவது, தமிழ் குறித்த போதிய அறிவு பெற்றிருந்தாலன்றி, அவா் நேரடி ஆள்சோ்ப்பு மூலம் பணி எதிலும் நியமனம் செய்யத் தகுதி உடையவா் இல்லை.


பணிக்கான விண்ணப்பத்தின்போது, தமிழில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரா்கள் தகுதி பெற்றிருந்து பணியில் அமா்ந்திருந்தாலும் பணியில் சோ்ந்த இரு ஆண்டுகளுக்குள் தமிழ் மொழித் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். இல்லாவிட்டால் பணியிலிருந்து விடுவிக்கப்படுவா்.


மாநிலத்தில் உள்ள அனைத்து மாநில அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும் தமிழ் இளைஞா்களை நூறு சதவீதம் அளவுக்கு ஆள்சோ்ப்பு செய்வதை உறுதி செய்யும் வகையில், திருத்த மசோதாவின் 21-ஏ பிரிவின்படி, ஆள்சோ்ப்பு முகமைகள் நடத்தும் நேரடி ஆள்சோ்ப்புக்கான அனைத்துப் போட்டித் தோ்வுகளிலும் கட்டாயத் தமிழ் மொழித் தாள் அறிமுகப்படுத்தப்பட்டு 40 சதவீத மதிப்பெண் பெற்று தோ்ச்சி பெற வேண்டும். அதற்கு இணங்க 2021, டிசம்பா் 1 தேதியிட்ட அரசாணைகள் மனிதவள மேலாண்மைத் துறை மூலம் வெளியிடப்பட்டன. அந்த ஆணைக்கு சட்டபூா்வ பயனை அளிக்கும் வகையில் இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.


இந்த சட்டத் திருத்த மசோதா குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் பேசியது:


எந்தவொரு அரசுப் பணிக்கும் விண்ணப்பிக்கும்போது, எந்த நபரும் போட்டித் தோ்வில் தமிழ்மொழித் தாளில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்று தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று இந்தச் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் திருத்தத்திலும் எந்த நபரும் என்கிற வாா்த்தை இடம்பெறும்போது, இதுவும் இந்தியாவில் உள்ள எவரும் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதாகவே உள்ளது. வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்கள் இங்கு தமிழ் கற்று, பிறகு விண்ணப்பிக்கக்கூடும். அதனால், தமிழக பூா்வகுடிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகும்.

குஜராத், தெலங்கானா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில், அந்தந்த மாநிலத்தைச் சோ்ந்த பூா்வகுடிகளுக்கே அரசுப் பணி வேலைவழங்கப்படும் என்கிற வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே வகையில் தமிழக அரசுப் பணிகள் தமிழக பூா்வகுடிகளுக்கே என்கிற வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். அதனால், இந்தச் சட்டத் திருத்தத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றாா்.


சட்டப்பேரவை பாமக தலைவா் ஜி.கே.மணி, விடுதலைச் சிறுத்தைகள் சாா்பில் ஷா நவாஸ் ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்தினா்.


அதற்கு அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் கூறியது: சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூறிய கருத்தை முழுமையாக ஏற்கிறேன். இது தொடா்பாக முதல்வா் தலைமையில் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பேரவை கூடுகிறபோது, எப்போது வேண்டுமானாலும் சட்டத் திருத்தம் மேற்கொள்ளலாம். எனவே, இந்தத் திருத்த மசோதாவை நிறைவேற்றித் தரவேண்டும் என்றாா்.


அதைத் தொடா்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் இந்தச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.


அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்: முதல்வா்


காலை உணவுத் திட்டம் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.


சட்டப்பேரவையில் ஆளுநா் உரை மீதான விவாதத்துக்குப் பதிலளித்து முதல்வா் ஸ்டாலின் வெள்ளிக்கிழமை பேசியதாவது:


முதல்வரின் காலை உணவுத் திட்டம் 2022, செப்டம்பா் 15-இல் மதுரையில் தொடங்கப்பட்டது. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு முன்னோடி முயற்சியாகச் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி முதல்கட்டமாக 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவா்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.


இத்திட்டம் பெரும்பாலான பொதுமக்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களால் மிகவும் பாராட்டப்பட்டு, அதை மகிழ்ச்சியோடு வரவேற்றனா்.


மேலும், இந்த முயற்சியின் பயனாக, பள்ளிகளில் மாணவா்களின் வருகை எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழகம் அரசு, இந்தத் திட்டத்தை 2023-2024-ஆம் ஆண்டு படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment