படிப்பு, பட்டம் கடந்து தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்” - முதல்வர் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Wednesday, May 25, 2022

படிப்பு, பட்டம் கடந்து தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்” - முதல்வர்


சென்னை: கல்வி என்பது வெறும் பட்டமல்ல அறிவும் ஆற்றலும் தன்னம்பிக்கையும் துணிச்சலும் தரக்கூடியது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் 75-வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் முதல்வர் பேசியது: “இந்தக் கல்லூரி என்னுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு கல்லூரியாக இருந்திருக்கிறது, இருக்கிறது, இருக்கவும் போகிறது. நான் சேத்துப்பட்டில் இருக்கக்கூடிய ஹாரிங்க்டன் ரோடில் அமைந்திருக்கக்கூடிய எம்சிசி பள்ளியில் தான் எனது பள்ளிப்படிப்பை முடித்தேன். அந்தப் பள்ளிக்கு கோபாலபுரத்திலிருந்து இந்த ஸ்டெல்லா மேரிஸ் பஸ் ஸ்டாண்டில் இருந்து தான் 29C, பேருந்தில் செல்வேன். அந்தப் பேருந்தில் 15, 20 நாட்களுக்கு முன்பாக வழியில் நிறுத்தி ஏறி, மகளிர் இலவச பயண திட்டம் குறித்து ஆய்வு செய்தேன். இந்தக் கல்லூரி என்னுள் ஏற்படுத்திய இன்னொரு தாக்கம், நான் இந்த வழியாக செல்லுகிறபோது எல்லாம் மாணவிகள் கல்லூரி சுவற்றில் கலை, தமிழ் கலாசாரம் பற்றிய ஓவியங்கள் தீட்டிக்கொண்டிருப்பதை அடிக்கடி பார்ப்பதுண்டு. அதைப் பார்த்துத்தான் நான் பல்வேறு அரசுத் துறை அலுவலர்களோடு பேசும்போது ரயில்வே மேம்பாலங்களாக இருந்தாலும், வாகனங்கள் போகக்கூடிய மேம்பாலங்களாக இருந்தாலும், முக்கியமான இடங்களில், எப்படி ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் அந்தக் காம்பவுண்டில் மாணவிகள் ஓவியங்களை தீட்டி வைத்திருக்கிறார்களோ, அதேபோல் நீங்களும் அந்தப் பணியிலே ஈடுபடவேண்டும் என்று நான் அறிவுறுத்தியிருக்கிறேன். பல இடங்களில் அது நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. கல்வி என்பது வெறும் பட்டமல்ல, அறிவும் ஆற்றலும் தன்னம்பிக்கையும் துணிச்சலும் தரக்கூடியது. இத்தகைய குணங்களையும் உருவாக்கக்கூடிய நிறுவனமாக இது செயல்பட்டு வருவதை நான் நன்றாக அறிவேன். தமிழகத்தில் இப்போது அமைந்துள்ள அரசானது, கல்விக்கு அதிலும் குறிப்பாக பெண் கல்விக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்து வருகிறோம். மகளிர் அனைவருக்கும் கட்டணமில்லா பேருந்து சேவையை வழங்கியதன் மூலமாக பெண்குலத்துக்கு மாபெரும் சேவையை இந்த அரசு உருவாக்கி இருப்பதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். உயர் கல்வியைப் பெறுவதற்காக கல்லூரிகளில் சேரக்கூடிய அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்குவோம் என்று அறிவித்து அதையும் செயல்படுத்த இருக்கிறோம். தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள், இளைஞர்கள் கல்வியில் ஆற்றலில் மேன்மை அடைய, நான் முதல்வன் என்ற திட்டத்தைத் தொடங்கி இருக்கிறோம். இன்று காலையில் ராணிமேரிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் நான் கலந்து கொண்டேன். இளைஞர்களின் திறன்மிக்க திருவிழாவாக அது நடைபெற்றது. அதே விழாவில், மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்திருக்கக் கூடிய பொருட்களின் கண்காட்சியையும் நான் திறந்து வைத்தேன். மகளிர் அனைவரும் தங்களது சொந்த முயற்சியால் முன்னேறி – யார் தயவையும் எதிர்பார்க்காமல் வாழ முயலவேண்டும் என்ற அந்த அடிப்படையில் தலைவர் கலைஞரால் உருவாக்கப்பட்டது தான் மகளிர் சுய உதவிக்குழுக்கள். லட்சக்கணக்கான மகளிர் குழுக்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. கோடிக்கணக்கில் அவர்களுக்கு நிதி உதவியை நாம் வழங்கி வருகிறோம். உயர் கல்வியில் பொற்காலம் என்று சொல்லத் தக்க வகையில் உயர் கல்வியில் பல்வேறு முன்னெடுப்புகளை தமிழக அரசு செய்து வருகிறது. கல்வியில், வேலை வாய்ப்பில், தொழில் வளர்ச்சியில், சமூக வளர்ச்சியில் முன்னேறிய மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்ட, திராவிட மாடல் கொள்கையின் படி இன்றைய அரசு செயல்பட்டு வருகிறது என்பதை 75 ஆண்டுகால கல்விப் பெருமை கொண்ட இந்த ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி விழாவில் சொல்லிக் கொள்வதில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன். திராவிட இயக்கம் என்பதே ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற தத்துவத்தின் அடைப்படையில் உருவாக்கப்பட்ட இயக்கம் ஆகும். அத்தகைய சமூகநீதித் தத்துவத்தை தனது கல்வி நிறுவனத்திலும் பயன்படுத்தும் இந்த நிறுவனத்தை நான் மனதாரப் பாராட்டுகிறேன். உங்களது தொண்டு நூற்றாண்டுகள் கடந்து, பல நூற்றாண்டுகளுக்குத் தேவை என்பதை வலியுறுத்திச் சொல்ல விரும்புகிறேன். அன்புள்ள மாணவியர்கள் அனைவருக்கும் எனது அன்பான வேண்டுகோள் என்னவென்று கேட்டால், இந்தக் கல்லூரிக் காலம் என்பது வாழ்வில் இன்னொரு முறை கிடைக்காது. எனவே, கல்லூரிக் காலக் கல்வியை முழுமையாக, முறையாக நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில், உங்களது தனித்திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில், படிப்பு – பட்டம் ஆகியவை கடந்து, தனித்திறமைகள் கொண்டவர்களால் மட்டும்தான் முன்னேற்றம் காண முடியும். அத்தகைய திறமைசாலிகளாக நீங்கள் வளர்ந்து, உங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இந்த மாநிலமும் பயனுறக்கூடிய வகையில், இந்த நாடும் பயனுறக்கூடிய வகையில் நீங்கள் பணியாற்ற வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் உரிமையோடு விரும்பி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் பேசினார்.

No comments:

Post a Comment