தினம் ஒரு தகவல் ஓவியம் உருவாக்கிய நகரம் - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Sunday, October 17, 2021

தினம் ஒரு தகவல் ஓவியம் உருவாக்கிய நகரம்

அது 1944-ன் ஆகஸ்டு மாதம். நாஜி படையினரின் ஆக்கிரமிப்பிலிருந்து வார்ஸாவை விடுவிப்பதற்காக போலந்து நாட்டின் போராளிப் படையினர் மூர்க்கமாக தாக்குதல் தொடுத்துக்கொண்டிருந்தனர். 

அந்தக் கிளர்ச்சியின் போது, குறைவான ஆயுதங்களையே கொண்டிருந்த போலந்து போராளிகள் நாஜிப் படையினருக்குக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தினார்கள். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாஜிக்கள் படுகாயமடைந்தும் இறந்தும் போனார்கள். சாதாரண குடிமக்கள்தான் மிகப் பெரும் இழப்பைச் சந்தித்தார்கள். ஒன்றரை லட்சம் பேருக்கும் அதிகமானோர் விமானத் தாக்குதல்களிலும், அந்த நகரத்தின் ஊடாக நடந்த சண்டைகளிலும் உயிரிழந்தார்கள். தங்கள் படையினர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் விதத்தில் நாஜிக்கள் போலந்தின் தலைநகரான வார்ஸாவைத் தரைமட்டமாக்கினார்கள். 

அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரத்தின் மையப் பகுதி கிட்டத்தட்ட 85 சதவீதம் அழிக்கப்பட்டது. அதை அடுத்து நடந்ததுதான் வார்ஸா புனரமைக்கப்பட்ட வரலாறு. போலந்தின் புகழ்பெற்ற ஓவியரான பெர்னார்தோ பில்லோத்தோ(1722- 1780) வரைந்த ஓவியங்களை அடிப்படையாகக் கொண்டு தங்கள் தலைநகரை வார்ஸாவாசிகள் புனரமைக்க ஆரம்பித்தனர். போலந்து அரசரால் அரசவை ஓவியராக 1768-ல் நியமிக்கப்பட்டவர் பில்லோத்தோ. வார்ஸாவின் கட்டிடங்களையும் சதுக்கங்களையும் பில்லோத்தோ அழகான, துல்லியமான ஓவியங்களாக வரைந்தார். 

அந்த ஓவியங்களை அவர் வரைந்து கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஆன பிறகு அவற்றைக் கொண்டு அந்த நகரத்துக்குப் புத்துயிர் கொடுக்கப்பட்டது என்பதே அந்த ஓவியங்களின் மகத்துவத்தை நமக்குச் சுட்டிக்காட்டும். சிதிலங்களிலிருந்து புனரமைக்கப்பட்ட நகர மையம் இப்போது யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தலங்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. 1947-ன் கோடைக்காலத்தில் கட்டிடக் கலைஞர் ஹெர்மன் எச். பீல்டு அமெரிக்க வடிவமைப்பாளர்களின் சிறு குழுவொன்றை அழைத்துக்கொண்டு ஐரோப்பாவுக்குச் சென்றார். 

போருக்குப் பிந்தைய ஐரோப்பா எப்படிப் புனரமைக்கப்படுகிறது என்பதைப் பார்த்தறிந்து கொள்வதற்கானதுதான் அந்தப் பயணம். இங்கிலாந்து, செக்கோஸ்லோவேக்கியா, போலந்து போன்ற நாடுகளுக்குச் சென்று பார்த்தார். போலந்தில் வார்ஸா, கிராக்கோ போன்ற நகரங்களுக்குச் சென்று பார்வையிட்டார்கள். அவர்கள் எடுத்த புகைப்படங்களெல்லாம் போருக்குப் பிந்தைய நகர அழிவுகளின் சாட்சியங்களாக நிற்கின்றன. வார்ஸாவிலிருந்து தப்பிச்செல்லாதவர்கள் அந்தப் பேரழிவின் இடிபாடுகளிடையே வாழ்ந்தார்கள். கட்டிட இடிபாடுகளுக்கு இடையில் அவ்வப்போது பிணங்கள் காணக்கிடைப்பது அவர்களுக்குச் சர்வ சாதாரணம். 

போரின் நினைவுச் சின்னமாக அந்த நகரத்தை அப்படியே விட்டுவிட்டு வேறொரு இடத்தில் தலைநகரத்தை உருவாக்கிக ்கொள்ளலாம் என்று ஆரம்பத்தில் பரிந்துரைக்கப்பட்டது. சிதிலமான அந்த நகரத்தின் கட்டிட இடிபாடுகளின் சிதறல்களை கொண்டே நகரத்தின் புனரமைப்பு தொடங்கப்பட்டது. புனரமைப்பு வேலையில் கட்டிடப் பணியாளர்களும், கட்டிட நிபுணர்களும் ஈடுபட்டார்கள் என்றால் மலைமலையாகக் குவிந்திருந்த சிதிலங்களை அப்புறப்படுத்துவதில் உள்ளூர் மக்கள் உதவினார்கள். பில்லோத்தோ வரைந்த வீதிக் காட்சிகளின் 22 ஓவியங்களை கைப்பற்ற வரலாறு நெடுகிலும் கடும் போட்டி நிலவியிருக்கிறது. பில்லோத்தோவின் ஓவியங்களை நாஜிக்கள் கட்டம் கட்டி வைத்திருந்ததால் இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் பில்லோத்தோவின் ஓவியங்களின் விலைமதிப்பு பெருமளவில் அதிகரித்தது. பில்லோத்தோவின் ஓவியங்கள், போலந்து கட்டிடக் கலைஞர்களின் நிபுணத்துவம், கலை வரலாற்று அறிஞர்கள், கலைப் பாதுகாவலர்கள் போன்றோரின் உதவியுடன் பழைய நகரத்தை குறுகிய காலத்தில் புனரமைக்க முடிந்தது. பெரும்பாலான வேலைகள் 1955-க்கு முன்பே முடிந்திருந்தாலும் கூடுதல் கட்டுமானங்கள் 1980-கள் வரை நீடித்தன. எனினும், இன்றுவரையிலும் அந்த நகரம் இரண்டாம் உலக போரின் பாதிப்புகளை உணர்கிறது.

No comments:

Post a Comment