பித்தளைப் பொருட்களை சுத்தம் செய்து பராமரிக்க சில வழிமுறைகள்... - Kalviupdate

Latest

6 std Lesson plan

Click Here

7 std Lesson plan

Click Here

8 std Lesson plan

Click Here



1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Friday, October 8, 2021

பித்தளைப் பொருட்களை சுத்தம் செய்து பராமரிக்க சில வழிமுறைகள்...

பித்தளைப் பொருட்களை சுத்தம் செய்து பராமரிக்க சில வழிமுறைகள்... 

வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் அலங்காரப் பொருட்கள் வரை பித்தளையினால் செய்யப்பட்டவை சிறிது சிறிதாக மறுபடியும் வீடுகளை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டன என்றே சொல்லலாம். பழங்காலத்தில் அனைத்து வீடுகளிலும் புழக்கத்தில் இருந்த ஒரு உலோகமானது மறுபடியும் பெரும்பாலான வீடுகளில் புழக்கத்தில் வர ஆரம்பித்து விட்டது. 

 தங்கம் போன்று மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கும் பித்தளையினால் பூஜை சாமான்கள் முதல் வீட்டு வரவேற்பறை மற்றும் வீட்டின் முகப்புகளை பிரமாண்டமாக அலங்கரிக்கும் யானை, சிங்கம், மான்கள், கொக்குகள், காளை மாடுகள், பெரிய அலங்காரக் குத்து விளக்குகள், குதிரைகள் என அனைத்தும் செய்யப் படுகின்றன. 

பழங்காலத்தில் சமையலறையில் பயன்படுத்தப்படும் டம்ளர், தட்டுகள், டபரா செட்டுகள், குடம், தவளை, அடுக்கு, அண்டா, குண்டா என அனைத்து சாமான்களுமே பித்தளையினால் செய்யப்பட்டவற்றையே உபயோகித்து இருக்கிறார்கள். காலப்போக்கில் அவற்றை சுத்தம் செய்வதும் பாராமரிப்பதும் கஷ்டமான செயலாக இருந்ததால் அவற்றை உபயோகிப்பதை கைவிட்டிருப்பார்களோ என்று எண்ணத்தோன்றுகின்றது. பித்தளைப் பொருட்களை கழுவிச்சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை என்றால் அவை மிகவும் கருப்பாகவும், பொலிவிழந்தும் போய்விடும். பித்தளைப் பொருட்களைச் சுத்தம் செய்து பராமரிக்க இதோ சில வழிமுறைகள்: 

 * சிறிய பித்தளை சாமானாக இருக்கும் பட்சத்தில் அரை மூடி எலுமிச்சைச் சாற்றில் பேக்கிங் சோடாவைக் கலந்து பேஸ்ட் போல் ஆக்கிக் கொள்ள வேண்டும். இந்த பேஸ்ட்டை பித்தளைப் பாத்திரத்தின் மேல் தடவி மென்மையான துணியினால் சிறிது நேரம் அழுத்தித் துடைக்கவும். பின்பு, தண்ணீரால் நன்கு கழுவி உலர்ந்த துணியினால் துடைத்து பித்தளைச் சாமானை காய வைக்கும் பொழுது மிகவும் பளபளப்பாக காட்சியளிக்கும் சாமானைப் பார்க்க முடியும். கடைகளில் பித்தளைப் பாத்திரங்களைச் சுத்தம் செய்வதற்கென்றே விற்கப்படும் பவுடர்கள் தரமானவையா என்று உறுதி செய்த பின்னர் அவற்றை உபயோகிக்கவும். 

 * பித்தளையினால் செய்யப்பட்ட பெரிய அலங்காரப் பொருட்களைச் சுத்தம் செய்ய எலுமிச்சையை பாதியாக நறுக்கி அதன் மேல் டேபிள் சால்ட்டை தடவி அதை பித்தளைப் பொருட்களின் மேல் தேய்க்கும் பொழுது சிறிது சிறதாக எலுமிச்சையை நசுக்கி அதிலிருந்து வெளியேறும் சாறைக் கொண்டு தேய்க்க வேண்டும். கடைசியாக வெதுவெதுப்பான நீரினால் கழுவி, உலர்ந்த துணியினால் துடைத்துக் காயவைத்தால் அன்று வாங்கியது போல் பித்தளைப் பொருட்கள் புதிதாக பளபளப்புடன் ஜொலிப்பதை பார்க்க முடியும். 

 * கடலை மாவு, உப்பு மற்றும் வெள்ளை வினிகரை சம அளவில் கலந்து அவற்றை பொலிவிழந்திருக்கும் பித்தளைப் பாத்திரத்தில் மேல் மெல்லிய பூச்சாக பூசி ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்பு வெதுவெதுப்பான நீரினால் கழுவித் துடைக்க பித்தளைப் பாத்திரங்கள் பிரகாசிப்பதைப் பார்க்க முடியும். 

 * பித்தளையினால் செய்யப்பட்ட பூஜைப் பாத்திரங்களாக சிறிய விக்கிரகங்கள், விளக்குகள், பஞ்சபாத்திரம், தட்டுகள், தூபக்கலசம் போன்றவற்றைக் கழுவ மிகவும் எளிமையான யோசனை என்றால், அது ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சிறிதளவு புளியையும் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். அந்தத் தண்ணீர் வெதுவெதுப்பாக இருக்கும் பொழுது இந்த பூஜை சாமான்களை அந்த தண்ணீரில் போட்டு ஊற வையுங்கள். அரை மணி நேரம் கழித்து அந்த பாத்திரங்களை வெளியில் எடுத்து லேசாகத் தேய்த்துக் கழுவினாலே பாத்திரங்கள் பளிச்சிடுவதைப் பார்க்க முடியும். 

 * சாதாரண பல் துலக்கும் பற்பசையை மென்மையான துணியைக் கொண்டு பித்தளைப் பாத்திரங்களின் மேல் தேய்த்தும் சுத்தப் படுத்தலாம். வீட்டின் கதவுகள் மற்றும் வரவேற்பு அறைகளை அலங்கரிக்கும் பித்தளையினால் செய்யப்பட்ட அலங்காரப் பொருட்களை கடைகளில் கிடைக்கும் தரமான ஸ்பிரே மற்றும் பவுடர்களை உபயோகிக்கும் முறைகளை சரியாக படித்து பின்பு உபயோகிக்கவும். பெரும்பாலான இதுபோன்ற கிளீனர்களில் மென்மையான சோப்புகள் மற்றும் கரைப்பான்கள் உபயோகப்படுத்தப்படுவதால் அவை எளிதில் மெருகு குறைந்திருக்கும் பித்தளைப் பொருட்களை சட்டென்று மெருகேற்றிவிடுகின்றன. 

 * பித்தளைப் பொருட்களைத் துடைத்தோ அல்லது கழுவியோ சுத்தம் செய்த பிறகு அவற்றின் மேல் ஆளி விதை எண்ணெய் அல்லது கனிம எண்ணையைத் தடவி துடைத்து வைத்தால் அது பித்தளையின் மெருகு குறையாமல் பல நாட்கள் வரை வைத்திருக்கும். 

 * பித்தளை அலங்காரப் பொருட்களை தினமும் தூசு தட்டி ேதவைப்பட்டால் அவற்றின் மேல் மெழுகுப் பூச்சை பூசி வைக்கலாம். பித்தளைப் பொருட்களின் மேல் அரக்கு பூச்சை பூசுவதன் மூலம் அதன் பிரகாசத்தை நீண்ட நாட்கள் வரை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

 * பித்தளைப் பொருட்களை சுத்தம் செய்யத் துவங்கும் முன்பு அவை உறுதியான பித்தளையால் செய்யப்பட்டதா அல்லது பித்தளைப் பூச்சினால் செய்யப்பட்ட பொருளா என்பதை தெரிந்து கொண்டு பின்பு சுத்தம் செய்யத் துவங்க வேண்டும். பித்தளைப் பூச்சினால் செய்யப்பட்ட பொருட்களாக இருக்கும் பட்சத்தில் அவற்றைக் கடுமையான கிளீனர்கள் மற்றும் ரசாயனங்கள் மூலம் ஒரு போதும் சுத்தம் செய்யக்கூடாது. 

 * பித்தளைப் பொருட்களைச் சுத்தம் செய்யும் பொழுது எப்பொழுதும் மென்மையான துணியை உபயோகப்படுத்தியே துடைக்க வேண்டும். இரும்பு நார், பிளாஸ்டிக் நார் மற்றும் பிரஷ்ஷைக் கொண்டு தேய்க்கக் கூடாது.

No comments:

Post a Comment